ஆசிய கண்டத்தில் இந்து சமுத்திரத்தின் மத்தியில் அமைந்துள்ள ஒரு தீவவே இலங்கை நாடாகும்.
உலகில் காணப்படக்கூடிய நாடுகள் ஒவ்வொன்றையும் அபிவிருத்தி அடைந்த நாடுகள், அபிவிருத்தி அடைந்து கொண்டு வரும் நாடுகள் மற்றும் பின்தங்கிய நாடுகள் என வகைப்படுத்தி நோக்க முடியும். அந்த வகையில் இலங்கை நாடானது அபிவிருத்தி அடைந்து கொண்டு வரும் ஒரு நாடாக காணப்படுகின்றது.
இலங்கை நாட்டின் அபிவிருத்தி கட்டுரை
குறிப்பு சட்டகம்
- முன்னுரை
- இலங்கை நாட்டின் அபிவிருத்தி நிலை
- அரசாங்கம் மேற்கொள்ளும் அபிவிருத்தி திட்டங்கள்
- அபிவிருத்தி பாதையில் எதிர்கொள்ளும் சவால்கள்
- அபிவிருத்திப் பாவதையில் கை கொள்ள வேண்டிய நடைமுறைகள்.
- முடிவுரை
முன்னுரை
ஒரு நாட்டினது அபிவிருத்தி என்பது அந்நாட்டின் தேவைகளை முழுமையாக நிறைவு செய்வதுடன், அந்நாட்டின் பூரண சுதந்திரத்தையும் குறித்து நிற்பதாக கருதப்படுகின்றது.
அதாவது ஒரு நாட்டின் வாழ்வாதாரம், சுதந்திரம் மற்றும் சுய கௌரவம் என்பன அபிவிருத்தி நிலையைத் தீர்மானிக்கக் கூடியனவாக உள்ளன. இந்த வகையில் இலங்கையின் அபிவிருத்தி தொடர்பாக இக்கட்டுரையில் நோக்கலாம்.
இலங்கை நாட்டின் அபிவிருத்தி நிலை
இலங்கை நாடானது ஒரு மூன்றாம் மண்டல நாடாக உள்ளமையினால் இந்நாட்டில் வறுமை, பஞ்சம் என்பன ஆரம்ப காலங்களில் அதிகமாகவே காணப்பட்டன.
ஆயினும் தற்கால நவீன அபிவிருத்தி திட்டங்களுக்கு அமைவாக நாட்டில் வறுமை வீதம் சற்று குறைந்து காணப்படினும், நாட்டின் அபிவிருத்தி நிலையில் வறுமை என்பது ஒரு முக்கிய பிரச்சினையாகவே காணப்படுகின்றது.
அதுபோலவே பொருளாதார நெருக்கடி, விலை ஏற்றம், வரிகளின் அதிகரிப்பு, உள்நாட்டு உற்பத்தி குறைவு போன்ற பல்வேறு காரணங்கள் நாட்டின் அபிவிருத்தி நிலையில் பாதிப்பு செலுத்துவதாக உள்ளன.
மறுபக்கம் கல்வி நிலையினைப் பார்ப்போமே ஆனால் சாதாரண மக்களும் கல்வியில் முன்னேற்றம் அடையக்கூடிய அபிவிருத்தி நிலை தற்காலங்களில் தோன்றியுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கதாகும்.
அரசாங்கம் மேற்கொள்ளும் அபிவிருத்தி திட்டங்கள்
இலங்கை நாட்டில் அரசாங்கங்கள் ஆரம்ப காலம் தொட்டு பல்வேறு வகையான அபிவிருத்தி செயற்திட்டங்களை முன்னெடுத்து வருகின்றன.
இந்த வகையில் உள்நாட்டு உற்பத்தி வருவாய்களை அதிகப்படுத்துவதற்காக மானியங்கள் வழங்குதல், பாதைகள் மற்றும் குளங்களை புணர்நிர்மாணம் செய்தல், தொழிற்சாலைகள் உருவாக்கப்படுதல், நகரமயமாக்கம், வறுமை ஒழிப்புத் திட்டங்களை முன்னெடுத்தல் (ஜனசவிய சமர்த்தி அஸ்வெசும),
மக்களுக்கான கால்நடை வளர்ப்பு விவசாய பொருட்கள் வழங்குதல், சுய தொழில் வழிகாட்டல் செயலமர்வுகளை நடத்துதல் போன்றவாராக, நடைமுறைக்கு வந்த ஒவ்வொரு அரசாங்கமும் இலங்கையின் அபிவிருத்தி நோக்கில் பல்வேறு நிகழ்ச்சி திட்டங்களை வகுத்து நடைமுறைப்படுத்தியுள்ளனர்.
அபிவிருத்தி பாதையில் எதிர்கொள்ளும் சவால்கள்
இலங்கை நாடானது பொதுவாகவே ஒரு விவசாய நாடு என்ற வகையிலும், மூன்றாம் மண்டல நாடு என்ற வகையிலும் நாட்டின் அபிவிருத்திப் பாதையில் பல்வேறு சவால்களை எதிர்கொள்ள வேண்டிய நிலை ஏற்படுகின்றது.
இந்த வகையில் நாட்டுக்கு தேவையான பாரிய அபிவிருத்தி திட்டங்களை மேற்கொள்ளும் போது அவற்றினை நிறைவு செய்வதற்கான பணபலம் இன்மையினால் வெளிநாடுகளிடம் இருந்து கடன் உதவிகளை பெறவேண்டிய நிலையே இங்கு காணப்படுகின்றது.
இவ்வாறாக வீதிப்புனர் அமைப்பு, நகரமயமாக்கம், வீட்டுத் திட்டம் போன்ற பல்வேறு அபிவிருத்தி செயற்திட்டங்களுக்காக இலங்கையை அதிகமான கடன் தொகையில் மூழ்கியுள்ளமையை காண முடியும்.
மேலும் பொருளாதார நெருக்கடி, வரி சுமை, பொருட்களின் தட்டுப்பாடு போன்ற காரணங்களினாலும் உள்ளூர் உற்பத்திகளிலும் வீழ்ச்சி ஏற்படுவதனால், அபிவிருத்தி நிலையிலும் மந்த நிலை ஏற்படுகின்றன.
அபிவிருத்திப் பாவதையில் கை கொள்ள வேண்டிய நடைமுறைகள்
இலங்கையின் அபிவிருத்தி நிலையில் முன்னேற்றம் காண வேண்டும் என்பதே இந்நாட்டில் வாழக்கூடிய ஒவ்வொரு மனிதர்களும் கனவாகும்.
இந்த வகையில் அரசானது நாட்டின் உள்ளூர் உற்பத்தியை அதிகரிக்கும் வகையில் மக்களுக்கான அதிக விழிப்புணர்வுகளையும், உதவி திட்டங்களையும் வழங்குவது அவசியமானதாகும்.
மேலும் நகரமயமாக்கம் செயத்திட்டங்களுக்காக வெளிநாடுகளில் இருந்து பெரும் கடன் தொகைகளுக்கு பதிலாக, வெளிநாட்டு ஏற்றுமதி பொருட்களின் உற்பத்தியை அதிகரித்தல், சுற்றுலாத்துறையை வளப்படுத்தல் போன்றவற்றின் மூலம் அதிகமான இலாபங்களை பெற்று உள்நாட்டு அபிவிருத்தி திட்டங்களை மேற்கொள்ள முடியும்.
முடிவுரை
ஒவ்வொரு நாட்டினதும் எதிர்காலமும் அந்நாட்டின் அபிவிருத்தியிலேயே தங்கி உள்ளது. அதாவது அந்நாட்டின் வளர்ச்சி, வீழ்ச்சி என்பவற்றைத் தீர்மானிப்பதாக அது அமைந்துள்ளது.
இந்த வகையில் இலங்கையின் நாட்டின் எதிர்காலமும் அதன் அபிவிருத்திப் பாதையும் அந்நாட்டு அரசாங்கத்திடமும், மக்களின் கைகளிலுமே காணப்படுகின்றது.
ஆகவே அங்கு வாழக்கூடிய ஒவ்வொருவரும் சிந்தித்து செயல்படுவதன் மூலம் அந்நாட்டின் அபிவிருத்தியை மென்மேலும் துரிதப்படுத்த முடியும்.