திருமணம் என்பது ஆயிரம் காலத்துப் பயிர் என பெரியவர்கள் கூறுவார்கள். இத்தகைய திருமணம் பெரியவர்களாக நிச்சயிக்கப்படும் போது திருமணப் பொருத்தம் பார்த்தே நிச்சயிக்கப்படுகின்றது. பொருத்தம் இல்லையெனில் திருமணம் செய்வதில்லை.
அதாவது, இந்துக்கள் மத்தியில் நம்பிக்கையின் மூலக்கல்லாக திருமணப் பொருத்தம் என்பது இருப்பதால், பொருத்தம் பார்ப்பதற்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கின்றனர். தம்பதியினரின் நட்சத்திரங்கள் மற்றும் ஜாதகம் பார்த்து திருமணத்தில் அவர்களது எதிர்கால நிலை என்னவாக இருக்கும் என்பதனைப் பார்க்கின்றார்கள். பொருந்தவில்லை எனில் திருமணம் நிறுத்தப்படும்.
அந்த வகையில் 12 வகையான பொருத்தங்கள் உள்ளன. அவையாவன, தினப் பொருத்தம், கணப் பொருத்தம், மகேந்திரப் பொருத்தம், ஸ்திரி தீர்க்கப் பொருத்தம், யோனி பொருத்தம், ராசி பொருத்தம் ராசி அதிபதி பொருத்தம், வசிய பொருத்தம், ரஜ்ஜு பொருத்தம், வேதை நாடி, விருட்சப் பொருத்தம் போன்றன உள்ளன.
மகேந்திரப் பொருத்தத்தின் முக்கியத்துவம்
தினப்பொருத்தம், யோனி பொருத்தம் ஆகிய இரண்டும் அடிப்படை பொருத்தங்களாக பார்க்கப்படுவது போலவே மகேந்திர பொருத்தமும் முக்கியமானதாக பார்க்கப்படுகின்றது. மேலும் மகேந்திர பொருத்தம் கட்டாயம் தேவை எனினும் ராசிப் பொருத்தம் இருந்து மகேந்திர பொருத்தம் இல்லாவிடினும் திருமணம் முடிக்கலாம்.
மகேந்திரப் பொருத்தம்
திருமணப் பொருத்தத்தில் மகேந்திர பொருத்தம் என்பது முக்கிய பொருத்தங்களில் ஒன்றாக உள்ளது. இது குழந்தை பாக்கியத்தை அருளும் பொருத்தமாகும். திருமண வாழ்க்கையில் அடுத்த கட்டமான குழந்தைப் பேறைக் குறித்து கணிக்கப்படும் பொருத்தமே மகேந்திர பொருத்தம் என அழைக்கப்படுகின்றது.
மணமக்களின் தாம்பத்திய வாழ்க்கைக்கு உறுதியளிக்கும் விதமாக மகேந்திர பொருத்தம் இருக்கின்றது. மகேந்திர பொருத்தம் இருந்தால் ஒன்றுக்கு மேற்பட்ட பிள்ளைப் பேறுகள் இருக்கும்.
மகேந்திர பொருத்தம் இருந்தாலும் ஆணின் ஜாதகத்தில் சுக்கிரன் குரு நிலை ஜோதிட ரீதியாக கணிக்க வேண்டியது அவசியமாகும். லக்கினத்துக்கு ஐந்தாம் இடத்தையும், ராசிக்கு ஐந்தாம் இடத்தையும் பார்த்தல் வேண்டும்.
மேலும் ஒரு ஆணின் ஜாதகத்தில் சுக்கிரனும், பெண் ஜாதகத்தில் குருவும் நன்றாக இருந்தால் குழந்தை பாக்கியத்தில் பிரச்சனை இருக்காது. ஆனால் ஐந்தாம் இடத்துக்கு அதிபதி பாவ கிரகத்துடன் தொடர்பில் இருக்கின்றாரா என்பதனை ஆராய வேண்டும்.
இது சரியில்லாவிட்டால் மகேந்திர பொருத்தம் இருந்தாலும் குழந்தை பாக்கியத்தில் பிரச்சனை இருக்கும்.
மகேந்திரப் பொருத்தம் பெண்ணினுடைய நட்சத்திர எண்ணிக்கையில் தொடங்கி ஆணினுடைய நட்சத்திர எண்ணிக்கை வரை எண்ணி வரும்போது அதன் தொகை 4 7 10 13 16 19 22 25 ஆவதாக வந்தால் மகேந்திர பொருத்தம் உண்டு. இவை தவிர வேறு எண்களில் முடிந்தால் பொருந்தாது.
மகேந்திர பொருத்தத்தில் சிறப்பான பொருத்தமாக கருதப்படுவது பெண்ணின் விண்மீனில் துவங்கி ஆணின் விண்மீன் வரைய எண்ணி வந்தால் அதன் தொகை 4 13 22 ஆவது ஆக வருமாயின் அது சிறப்பான மகேந்திரப் பொருத்தமாக கணிப்பிடப்படுகிறது.
பெண்ணின் நட்சத்திரத்திற்கு 2 3 5 6 8 9 11 12 14 15 17 18 19 20 21 23 24 என்ற எண்ணிக்கையில் ஆணின் நட்சத்திரம் வந்தால் அவர்களுக்கு நட்சத்திர பொருத்தம் இல்லை.