நாம் வாழும் இவ் அழகிய உலகம் இன்று மாசு அடைந்து உள்ளது. வீதி எங்கும் குப்பை கூளங்கலாக மாற்றமடைந்து உள்ளது. இதற்கு மூல காரணம் நெகிழி உற்பத்தியின் பாரியளவிலான வளர்ச்சியாகும்.
குறிப்பு சட்டகம்
- முன்னுரை
- நெகிழி என்பது என்ன
- நெகிழியின் சாதகமான விளைவு
- நெகிழியின் பாதகமான விளைவு
- நெகிழியின் பயன்பாட்டை குறைக்கும் வழிகள்
- முடிவுரை
முன்னுரை
இன்று இவ் உலகம் நவீனமயமாக மாறியுள்ளது. மனிதர்களின் நடை, உடை, பாவனை என்பன தற்காலத்திற்கு ஏற்ப மாற்றப்பட்டுள்ளது. இலகுவாக ஒரு செயலை செய்வதிலும் இலகுவான வழிமுறைகளை பின்பற்றுவதற்கும் அதிகம் ஆர்வம் காட்டுகின்றார்கள்.
அதனடிப்படையில் உலகமயமான இச்சூழலில் நெகிழி பாவனையும் அதிகரித்து கொண்டு செல்கின்றது. அதனடிப்படையில் இக்கட்டுரையில் நெகிழி தொடர்பாக நோக்குவோம்.
நெகிழி என்பது என்ன
நெகிழி என்பது ஒரு பொருள் இளகிய நிலையில் இருந்து இறுகிய நிலைக்கு மாற்றமடைவது ஆகும். இதனை பிளாஸ்ரிக் என்றும் அழைப்பார்கள். பிளாஸ்ரிக் என்ற பொருள் கிரேக்க சொல்லில் இருந்து உருவானது.
செயற்கையான மூலக்கூறுகளை அடிப்படையாக வைத்து தற்கால உலகம் நெகிழியை உற்பத்தி செய்கின்றது. நெகிழி பொருட்கள் வெப்பத்தின் மாற்றத்தால் உருவாக்கப்படுகின்றன. இவை இளகும் வகை, இறுகும் வகை என இரு பிரிவுகளை கொண்டுள்ளது.
இளகும் வகை நெகிழியை மறு சுழற்சிக்கு உட்படுத்த முடியும். மாறாக இறுகும் வகை நெகிழியை மறு சுழற்ச்சிக்கு உட்படுத்த முடியாது. காரணம் இளகும் வகை நெகிழியை மீண்டும் மீண்டும் வெப்பமாக்க முடியும். இறுகும் வகை நெகிழி தரம் குறைந்தவை என்பதனால் அதிக வெப்பத்திற்கு உட்புகுத்த முடியாது இதனால் அவை மீள்பாவனைக்கும் பயன்படுத்த முடியாது.
நெகிழியின் சாதகமாக விளைவு
நகரமயமான நம் வாழ்க்கையில் நெகிழி பாவனை அதிகரித்து செல்லக் காரணம் நெகிழியால் மனிதர்களுக்கு கிடைக்கும் சௌகரியமான நிலையாகும். நெகிழிப்பொருட்களாக பார்க்கும் போது உணவுத்தட்டுகள், குளியல் உபகரணங்கள், சமையல் உபகரணங்கள், நாற்காலி, மேசை, பேனா, காலணி என்று பல பொருட்களை பயன்படுத்துகின்றோம்.
நெகிழியின் நன்மையாக குறைந்த விலையில் நெகிழிப்பொருட்களை கொள்வனவு செய்ய முடியும், பிற இடங்களுக்கு கொண்டு செல்வது இலகுவானது, இலகுவில் உடையும் தன்மையற்று காணப்படும், வீட்டு அழகிற்கு பயன்படுத்த முடியும், அலங்கார பொருட்களை இலகுவாக தயாரிக்க முடியும் இவ்வாறு பல பயன்கள் காணப்படுகின்றது.
நெகிழியின் பாதகமான விளைவு
நம் அன்றாட வாழ்க்கையில் அதிகளவில் நெகிழி பொருட்களை பயன்படுத்துகின்றோம் என்பது அனைவரும் அறிவோம். அளவுக்கு மீறினால் அமுதமும் நஞ்சு என்பது போல் நாம் அதிகளவில் பயன்படுத்தும் நெகிழியும் பாரிய அளவு தீமையை வழங்குகின்றது. நெகிழிப்பொருட்கள் பாவனையால் உடல் ரீதியான பிரச்சினைகள் அதிகம் காணப்படுகின்றது.
சனத்தொகை கூடிய நாடுகளில் சேதமடைந்த பொருட்களை மீள் சுழற்ச்சிக்கு உட்படுத்த முடியாமையால் எரித்தல், புதைத்தல் போன்ற நடவடிக்கையை மேற்கொள்கின்றனர். நெகிழிப்பொருட்களை எரிப்பதன் மூலம் காற்று மாசடைந்து சுவாசப்பிரச்சினை ஏற்படுகிறது. அத்துடன் ஓசோன் படை சிதைவும் ஏற்படுகின்றது.
புதைப்பதன் காரணமாக மண்ணின் வளம் குறைந்து மரங்கள், செடி, கொடிகளின் வளர்ச்சி குறைவடைகின்றது.
சில நபர்கள் ஆற்றில், கடலில் வீசுகின்றனர். இது அதிகம் சுற்றுலாதலங்களாக காணப்படும் இடத்தில் ஏற்படுகின்றது.
இவ்வாறு வீசப்படுவதால் விவசாய நிலங்களுக்கு பயன்படுத்தும் வாய்க்கால் இடையில் அடைபட்டு பயிர்கள் சேதமடையும், கடல்வாழ் உயிரினங்களிற்கு தேவையான சூரிய ஒளி, காற்று என்பவற்றை பெறமுடியாது இறந்துவிடும். இயற்கை அனர்த்தங்களுக்கு முகங்கொடுக்க வேண்டி ஏற்படும். இவ்வாறு பிளாஸ்ரிக் பாவனையால் பாதகமான விளைவுகள் பல ஏற்படுகின்றது.
நெகிழியின் பயன்பாட்டை குறைக்கும் வழிகள்
நெகிழிப்பொருட்களை குறைந்த அளவில் பயன்படுத்துவதன் மூலம் நாம் இவ் உலகத்தையும் எம்மையும் பாதுகாக்க முடியும்.
உதாரணமாக பொலித்தீன் பாவனைக்கு பதிலாக மீள்சுழற்ச்சி பைகளை பயன்படுத்தல், பிளாஸ்ரிக் தண்ணீர் போத்தலுக்கு பதிலாக கண்ணாடி போத்தல்களை பயன்படுத்தல், பிளாஸ்ரிக் குவளைகளில் நீரை சேமிப்பதை விட மட்பாண்டங்களில் நீரை சேமிக்கலாம், மீள் சுழற்ச்சி அடையகூடிய பொருட்களை உருவாக்கல், புதைத்தல், எரித்தல், வீசுதல் என்பன தண்டனைக்குரிய குற்றமாக பிரகடணப்படுத்தல்,
சூழல் தொடர்பான நெகிழி உற்பத்திகளை மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தல், நம் வீட்டு கழிவுகளை பிரித்து மீள்சுழற்சி உற்பத்தி நிறுவனங்களிடம் ஒப்படைத்தல், தேவையற்ற பிளாஸ்ரிக் பொருட்களை வீட்டு அழங்கார பொருட்களாக மாற்ற குழந்தைகளுக்கு சொல்லி கொடுங்கள். இவ்வாறு இயன்றளவு நெகிழிப்பாவனையை குறைக்க முடியும்.
முடிவுரை
நம் வாழ்க்கையில் நன்மை, தீமை என இருபக்கங்கள் உண்டு. அதனை தடுக்கும் வழிமுறைகளும் உண்டு. அவ்வாறு தான் நெகிழி உற்பத்திகளும் எம்மை அறியாமல் அதிகளவு பயன்படுத்த ஆரம்பித்து இன்று அதன் நன்மை, தீமைக்குள் மாட்டிகொண்டு உள்ளோம். இதனை தடுப்பதற்கு எம்முள் சிறு மாற்றம் ஒன்று ஏற்பட்டால் போதும்.
நம் உலகத்தை இயற்கையாகவும் தூய்மையாகவும் வைத்திருந்தால் கண்டிப்பாக மகிழ்ச்சியான சூழலை உருவாக்க முடியும்.
நெகிழி பாவனை மூலம் நாம் நிம்மதியற்ற வாழ்க்கையை வாழ்கின்றோம். நெகிழியின் பாவனையை குறைப்பதன் மூலம் நம் நிம்மதியான வாழ்க்கையை மறுபடியும் கண்டிப்பாக பெறமுடியும்.