இஸ்லாமியர்களின் சிறப்புமிக்க மாதங்களில் ஒன்றே ரமலான் மாதமாகும். அந்த வகையில்இந்த ரமலான் மாதத்தில் சிறப்புமிக்க ஒன்றே ரமலான் மாத நோன்பாகும். இது இஸ்லாமியர்களின் 3வது கடமையாகும். இந்த ரமலான் மாதமானது லைலத்துல் கத்ர் என சிறப்புமிக்கதொரு இரவை கொண்டதோர் மாதமாகும்.
ரமலான் மாதம் என்பது
இஸ்லாமிய நாட்காட்டியின் அடிப்படையில் 9ம் மாதத்தில் வரக்கூடியதொரு மாதமே ரமலான் மாதமாகும்.
இம்மாதத்தில் அதிகாலை முதல் சூரிய அஸ்தமனம் வரையான காலப்பகுதியில் உண்ணாமல், பருகாமல், தீய பழக்கங்களில் ஈடுபடாமல் நோன்பு இருப்பது கட்டாயக் கடமையாகும்.
மேலும் இம்மாதம் வந்து விட்டால் சுவர்க்கத்தின் வாசல்கள் திறக்கப்படுவதோடு மட்டுமல்லாமல் அருள் வாயில்களும் திறக்கப்படுகின்றது.
ரமலான் மாதத்தின் சிறப்புக்கள்
ரமலான் மாதமானது பல்வேறு சிறப்புக்களை கொண்டமைந்ததாகவே காணப்படுகின்றது.
அந்த வகையில் ரமலான் மாதத்தில் வானத்தின் வாசல்கள் திறக்கப்படுவதோடு நரக வாசல்கள் அடைக்கப்படுகின்றன. மேலும் சைத்தான் விலங்கிடப்பட்டு காணப்படுவான்.
ரமலான் மாதத்தில் நாம் செய்கின்ற சிறு தர்மங்களும் ஈடு இணையற்ற பாக்கியங்களை பெற்று தரக்கூடியதாகும். மேலும் இம்மாதமானது எண்ணற்ற நன்மைகளை எமக்களிக்கக்கூடியதாகும். மேலும் குர்ஆன் இவ் உலகிற்கு இறக்கப்பட்ட மாதமாகவும் அமைந்துள்ளது.
ஆயிரம் மாதங்களை விட சிறந்த இரவான லைலத்துல் கத்ர் என்ற இரவை எமக்களித்த சிறப்புமிக்க மாதமே ரமழான் ஆகும். அந்த வகையில் லைலத்துல் கத்ர் இரவில் நாம் வணக்க வழிபாடுகளில் ஈடுபடும் போது அதிகளவு நன்மைகளை ஈட்டித்தரக்கூடியதாகவே காணப்படுகின்றது.
ரமலான் மாதத்தில் நோன்பு நோற்பவர்களுக்கு இறைவன் சுவர்க்கத்தை வழங்குகின்றான். மேலும் அவர்களுக்கென்று மறுமை நாளில் ரய்யான் எனும் வாசல் அமைக்கப்பட்டு அதனூடாக சுவர்க்கத்திற்கு நோன்பாளிகள் செல்வர்.
ரமலான் மாதத்தில் கடைசியில் வரும் இறுதி பத்து நாட்களும் அதி முக்கியத்துவம் வாய்ந்தவையே அந்த வகையில் இந்நாட்களில் நாம் பிராத்திப்பதானது அங்கீகரிக்கப்படுவதோடு நல் அமல்களையும் பெற்றுத்தரக்கூடியதாகவே திகழ்கின்றது.
பொறுமையை கற்றுத் தரும் மாதமாகவும், ஏழைகளின் பசியினை உணர்த்தக்கூடிய மாதமாகவும் இவ் ரமலான் மாதமே காணப்படுகின்றது. மேலும் இரவு நேர சிறப்புத் தொழுகையுள் ஒன்றான தராவீஹ் இவ் ரமலான் மாதத்தில் கூட்டாக நிறைவேற்றப்படுகின்றமை சிறப்பிற்குரியதாகும்.
அதே போன்று உடல் ரீதியான கடமையாக தொழுகை மற்றும் உள ரீதியான கடமை நோன்பு பொருள் ரீதியான கடமை ஸகாத் என பல்வேறு வணக்க வழிபாடுகளை ஒன்று சேர நிறைவேற்றக்கூடியதாகவும் அமைந்துள்ளது.
ஆயிரம் மாதங்களை விட சிறப்புமிக்க லைலத்துல் கத்ர் இரவு
லைலத்துல் கத்ர் என்பது கண்ணியமிக்க இரவினையே சுட்டி நிற்கின்றது. ரமலான் மாதத்தின் கடைசிப் பத்து நாட்களில் ஒற்றைப் படையான நாட்களில் இடம் பெறும் சிறப்புமிக்கதொரு இரவே லைலத்துல் கத்ர் இரவாகும்.
அந்த வகையில் இது பற்றிய ஹதீஸை நோக்குவோமேயானால் லைலத்துல் கத்ரை ரமலானின் கடைசிப் பத்து நாட்களில் ஒற்றைப் படை இரவுகளில் நீங்கள் தேடுங்கள் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் என்பதினூடாக அறிந்து கொள்ளலாம்.
மேலும் லைலத்துல் கத்ர் இரவிலேயேதான் திருக்குர்ஆன் அருளப்பட்டதோடு இவ் இரவானது ரமலான் மாதத்தில் காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கதாகும். இவ் லைலத்துல் கத்ர் இரவானது அதிக நன்மையை ஈட்டித்தரக்கூடியதொரு இரவாகும்.
மேலும் இவ் இரவில் மலக்குகள் நன்மைகள், அருள்கள் மற்றும் சிறப்புக்கள் என பலவற்றை கொண்டு பூமியில் இறங்குகிறார்கள்.
நோன்புக்குரிய மாதமே ரமலான் மாதம்
இஸ்லாத்தின் அடிப்படையில் வணக்க வழிபாடுகளை மேற்கொள்பவர்களுக்கு கூலியாக மறுமையில் சுவர்க்கம் கிடைக்கப் பெறும் என்பதே இஸ்லாமிய நம்பிக்கையாகும்.
இவ் நோன்பானது இறையச்சத்தை ஏற்படுத்துகின்றது. அந்த வகையில் ரமலான் மாதத்தில் நோற்கப்படும் நோன்பானது மகத்துவமிக்கதாகும். அதாவது பஜ்ருக்கு முன் ஸஹர் உணவை உண்டு சூரிய மறைந்த உடனே நோன்பு திறப்பது சுன்னத்தான விடயமாகும். மேலும் ரமலான் மாத நோன்பானது எம்மை தீய விடயங்களில் இருந்து காக்கக்கூடியதாகும்.
எனவேதான் ரமலான் மாதமானது ஓர் சிறப்புமிக்க மாதமாக காணப்படுவதோடு இறைவனின் அருளை பெற்றுக் கொள்வதற்கானதோர் மாதமாகும் என்ற வகையில் இம் மாதத்தில் நல் விடயங்களை பேணி நடப்பது இறைவனின் நெருக்கத்தை பெற்று தரும்.