மனிதர்கள் சுயநலக்காரர்களாகவும், பதவி வெறி பிடித்தவர்களாகவும் இருப்பதினால் உலக சமாதானத்தை முழுமையாக கட்டி எழுப்ப முடிவதில்லை. இதனால் உலக சமாதானம் வெறும் கனவாகவே இருக்கின்றது.
சரியானதை செய்யவும், ஒருவரை ஒருவர் மதிக்கவும், ஒருவரின் மீது ஒருவர் அக்கறை காட்டவும், மனிதாபிமானத்துடன் செயல்படவும், வேற்றுமையில் ஒற்றுமை காணவும் எப்போது மனிதர்கள் கற்றுக் கொள்கின்றார்களோ அப்போதுதான் உலக சமாதானத்தை முழுமையாக கொண்டு வர முடியும்.
பிரச்சனைகள் நிறைந்த உலகில் நாம் வாழ்நாள் முழுவதும் சமாதானமாக வாழ பாடுபட வேண்டி இருக்கின்றது. சமாதானத்தை உருவாக்குவதற்கும், அதனைக் கட்டியெழுப்புவதற்கும், பாதுகாப்பதற்கும் மக்களுக்கு ஆற்றல்கள், சக்திகள் அவசியமாக உள்ளன.
சமாதானம் என்றால் என்ன
சமாதானம் என்பதற்கு தமிழில் பல அர்த்தங்கள் உள்ளன. பகைமை இல்லாத ஒரு நிலையை சமாதானம் என வரையறுக்கலாம். உலக மட்டத்தில் இது போர் இல்லாத நிலையையும் குறிக்கின்றது.
வன்முறையற்ற வாழ்வு சமாதானம் எனப் பொருள் கொள்ளலாம். Peace என்ற வார்த்தை ஆங்கிலோ பிரெஞ்சு பெஸ் (Anglo – French pes) மற்றும் பிரஞ்சு Paris சமாதானம் நல்லிணக்கம், மௌனம், உடன்பாடு ஆகியவற்றை குறிக்கின்றது.
சமாதானத்தின் முக்கியத்துவம்
சமூகப்பிராணியாகிய மனிதன் தனித்து வாழ முடியாது. பிறருடன் இணைந்தே தமது அன்றாட வாழ்க்கையை கடத்திச் செல்கின்றான். மனிதர்களிடையே காணப்படும் பல்வேறுபட்ட வேறுபாடுகளின் காரணத்தினால் தமக்கிடையே முரண்பட்டுக் கொள்ள நேரிடுகின்றது.
இது தனி நபர்களிடையே ஆரம்பித்து குடும்பம், குழுக்கள், வேலைத்தளங்கள், சமூகங்கள், நாடுகள் என விரிவடைந்து செல்கின்றன. எனவே அமைதியான சிறந்ததொரு வாழ்க்கையை வாழ சமாதானம் மிகவும் முக்கியமானதாகும்.
சமாதானத்தை கட்டியெழுப்பதற்கான வழிகள்
கிராமப்புறங்களில் வாழும் மக்களின் வாழ்வாதாரம், தொழில் வாய்ப்புகளுக்கு அதிக முக்கியத்துவம் வழங்க வேண்டும்.
சமூக, சமய நல்லிணக்கச் செயற்பாடுகளை முன்னெடுக்க வேண்டும்.
இன மத வெறுப்பின்பால் இளைஞர்கள் தூண்டப்படுவது தடுக்கப்பட வேண்டும். இன மத கலாச்சார பன்முகத்தன்மையில் ஒற்றுமை கட்டியெழுப்பப்படல் வேண்டும்.
மனித உரிமைகளை மேம்படுத்த வேண்டும்.
குற்ற நிரூபிக்கப்பட்டால் சட்டப்படி தண்டனை வழங்கப்பட வேண்டும். சட்டத்தின் முன் யாவரும் சமமாக பார்க்கப்பட வேண்டும்.
லஞ்சம், ஊழல், சமூக விரோத செயற்பாடுகள் போன்றன இல்லாது ஒழிக்கப்பட வேண்டும்.
சமாதான சகவாழ்வு
ஒரு சமூகம் தனது சமய, கலாசார மற்றும் ஆன்மீக தனித்துவங்களை, அடிப்படை உரிமைகளை, சுயகௌரவத்தை விட்டுக்கொடுத்து செய்து கொள்கின்ற சமரசம் சமாதான சகவாழ்வு அல்ல. மாறாக சமாதான சகவாழ்வு என்பது ஒரு சமூக உளவியல் விஞ்ஞானமாகும்.
ஒரு சமூகத்தில் சமாதான சகவாழ்வுக்கான முக்கிய நகர்வு யாதெனில், சமூகத்தின் புத்திஜீவிகள், சமூக ஆர்வலர்கள், அரசியல் சிவில் சன்மார்க்கத் தலைமைகள் கூட்டுப் பொறுப்புடன் ஒன்றுகூடி ஆராய்ந்து அதன் வரைமுறைகள் அறிந்து சமய கலாசார பண்பாட்டு விழுமியங்களைப் பேணி மேற்கொள்கின்ற ஓர் ஆக்கபூர்வமான பணியாகும்.
மேலும் சமாதான சகவாழ்வில் எப்போதும் புரிந்துணர்வும், விட்டுக்கொடுப்பும், சகிப்புத் தன்மையும் இன்றியமையாததாகும். சமூகத்திலுள்ள அனைவரும் சகோதரத்துவ உணர்வுடன் புதிய சவால்களுக்கு முகம் கொடுக்க முன்வர வேண்டும்.
பொதுப்பணிகளின் போது அனைவரும் கருத்து வேறுபாடின்றி இன, மத, மொழி வேறுபாடின்றி செயற்பட வேண்டும். அப்போதுதான் அமைதியான சகவாழ்வைப் பேண முடியும்.