நம் முன்னோர்களின் வாழ்க்கையோடு பின்னிப்பிணைந்து காணப்படுபவை சடங்குகள், சம்பிரதாயங்கள், விரதங்கள், பண்டிகைகள் என்பவையாகும்.
மனிதனின் பிறப்பில் இருந்து இறப்பு வரையான ஒவ்வொரு நிகழ்வுகளையும் சடங்குகளாகவும் சம்பிரதாயங்களாகவும் இந்து மக்களால் பின்பற்றப்படுகின்றது. இவற்றின் விளைவாக சௌபாக்கிய நிலையை பேண முடிகின்றது என்று நம்புகின்றனர்.
விரதங்களை பொறுத்த வரையில் இறைவனின் அருளை பெற இலகுவான வழிமுறை எனவும் மனிதனின் பாவ, புண்ணியங்களின் சேர்க்கை குறையும் எனவும் நம்பப்படுகின்றது.
இந்துக்களின் சில விரதங்கள் தெய்வங்களை சார்ந்ததும் சில விரதங்கள் பித்ரு சார்ந்த விரதங்களாகவும் காணப்படுகின்றது. அவற்றில் தை அமாவாசை விரதம், ஆடி அமாவாசை விரதம், புரட்டாதி அமாவாசை விரதம் என்பன முக்கியமான விரதங்களாக கவனத்தில் எடுக்கப்படுகின்றன.
தை அமாவாசை விரதம்
சூரியனும் சந்திரனும் ஒரே ராசியில் சந்திக்கின்ற தினம் அமாவாசை தினமாகும். அமாவாசையானது தை மாதத்தில் வரும் முதலாவது அமாவாசை அன்று தை அமாவாசை விரதம் அனுஷ்டிக்கப்படும்.
நம் முன்னோர்களுக்கு உரிய சாந்தியை செய்ய முடியாத சூழ்நிலையில் தவறும் பட்சத்தில் ஒவ்வொரு வருடமும் தை அமாவாசை அன்று விரதம் இருந்து உரிய சாந்தியை செய்து முடிப்பதற்காக தை அமாவாசை விரதம் அனுஷ்டிக்கப்படுகின்றது.
பித்ரு விரதம் அனுஷ்ட்டிப்பதற்கான நியதிகள்
ஒவ்வொரு இந்து வீட்டில் அவர்களின் மூதாதையர் ஆத்ம நலமுடன் இருப்பதற்கும் அவர்களின் பாவ, புண்ணியங்கள் என்பவற்றை தவிர்ப்பதற்கும் பித்ரு விரதம் மேற்கொள்வார்கள். எல்லா விரதங்களுக்கும் நியதிகள் உண்டு. எவை செய்ய வேண்டும், செய்ய கூடாது எனும் நியதிகள் அடிப்படையில் விரதங்கள் அனுஷ்டிக்கப்படுகின்றன.
தை அமாவாசை அன்று செய்யப்படுபவை
தை அமாவாசை விரதத்தை தாய், தந்தை இல்லாதவர்கள் கடைப்பிடிக்கின்றனர். இவ் விரதத்தின் போது செய்ய வேண்டியவையாக
- காலையில் நீராடுதல் வேண்டும் அல்லது புனித புண்ணிய தலங்களிற்கு சென்று நீராடல்.
- இறந்தவர்களை நினைத்து தர்ப்பணம் வழங்கல்.
- வீட்டில் உணவு சமைத்து இறந்தவர்கள் படங்களுக்கு படைத்தல் வேண்டும்.
- வீட்டில் சமைத்த உணவை தானமாக கொடுத்தல்.
- காகத்திற்கு படைத்தல்.
- அகத்தி கீரையை பசுவிற்கு வழங்கல்.
- இரவில் வீட்டில் நம் முன்னோர்களை நினைத்து அகல்விளக்கு ஏற்றல்.
இவற்றினை தை அமாவாசை தினம் அன்று செய்வதால் பித்ரு தேசம் நீங்கி குல செழிப்பு நிகழும். அத்துடன் நம் தடைப்பட்ட விடயங்கள் கைகூடும், கடன் தொல்லை தீரும், வீட்டில் தடைப்பட்ட சுப நிகழ்வுகள் நடைபெறும்.
தை அமாவாசை அன்று செய்ய கூடாதவை
விரத நாட்களில் சில விடயங்களை தவிர்த்து கொள்வது நம் வாழ்வின் நன்மையை பயக்கும் என்பார்கள். அவ்வாறு செய்ய கூடாத விடயங்கள்
- மாமிச உணவுகளை தவிர்த்தல்.
- உணவில் பாகற்காய், வாழைக்காய், பிரண்டை போன்ற காய்கறிகளை சேர்க்க வேண்டும்.
- சமைக்கும் உணவில் பூண்டு, வெங்காயத்தை தவிர்த்தல்.
- காகத்திற்கு உணவு வைத்தலை நடைமுறைப்படுத்தல்.
- முடி வெட்டுதல், நகம் வெட்டுதலை தவிர்த்தல்.
இவற்றை தவிர்ப்பதன் மூலம் விரதத்தை நிவர்த்தியாக பூர்த்தி செய்ய முடியும். அத்துடன் குடும்பத்தின் நலமும் மன மகிழ்ச்சியும் பெருகும்.