வைகுண்டம் என்பது விஷ்ணு வசிக்கும் இடமாகும். ஏகாதசி என்பதன் பொருள் யாதெனில், ஏகம் என்பது ஒன்று, தசம் என்றால் பத்து ஆகவே 1+10=11 ஐக் குறிப்பது ஏகாதசியாகும். ஒவ்வொரு மாதமும் 2 ஏகாதசிகள் வரும்.
அமாவாசை வளர்பிறையில் பதினோராவது நாளில் ஒன்றும், பௌர்ணமி தேய்பிறையில் 11வது நாளும் வரும். ஒரு வருடத்தில் 24 ஏகாதசிகள் வரும். வைகுண்ட ஏகாதசி வருவதால் வைணவர்களுக்கும், ஆருத்ரா வருவதால் சைவர்களுக்கும் உகந்த மாதம் மார்கழி ஆகும்.
ஏகாதசி தோன்றிய வரலாறு
ரிதய யுகத்தில் முரண் என்ற அசுரன் இருந்தான். தேவர்கள் உட்பட அனைவரையும் துன்புறுத்தினான். தேவர்களின் பிரார்த்தனைகளுக்கு இணங்கி மகாவிஷ்ணு முரணை சம்ஹாரம் செய்ய புறப்பட்டார்.
முரணின் படைக்கலன்களை அழித்த பகவான் அவனைத் திருத்துவதற்கு ஒரு சந்தர்ப்பம் கொடுக்கலாம் என்று திரு உள்ளம் கொண்டார். அதன்படி போர்க்களத்தில் இருந்து விலகி பத்திரிகாஷனத்தில் இருந்த ஒரு குகையில் போய் உறங்குவது போல் படுத்துக்கொண்டார்.
பகவானை தேடிக் கொண்டு வந்த முரண்பகவான் உறங்குவதாக நினைத்துக்கொண்டு அவரை கொல்ல வாளை ஓங்கினார். அப்போது மகாவிஷ்ணுவின் திருமேனியிலிருந்து ஒரு பெண் தோன்றினாள்.
முரணை போருக்கு அழைத்தாள். பெண்தானே என்று அலட்சியமாக நினைத்துக் கொண்டான். அந்தப் பெண் ஹோ என்று ஒரு ஒளியை எழுப்பினார். அந்த நிமிடத்தில் முரண் ஒரு பிடி சாம்பலாகிப் போனான்.
ஏதுமறியாததைப் போல் கண் விழித்த பகவான் தன் திருமேனியிலிருந்து வெளிபட்ட சக்தியை பாராட்டியதுடன் அவளுக்கு ஏகாதசி என்ற பெயரையும் சூட்டி, ஏகாதசியை ‘நீ தோன்றிய நன்னாளில் விரதமிருந்து என்னை வழிபாடுபவர்களுக்கு சகல செல்வங்களையும் அருள்வதுடன் முடிவில் வைகுண்டப் பதவியை அருளுவேன் என அருளினார்.
வைகுண்ட ஏகாதசி கொண்டாடப்படுவதன் காரணம்
முன்பொரு காலத்தில் பிரம்மாவிற்கு ஏற்பட்ட அகங்காரத்தை ஒடுக்குவதற்காக மகாவிஷ்ணு தன்னுடைய காதுகளில் இருந்து மது, கைடவர் என இரண்டு அசுரர்களை வெளிப்பட வைத்தார்.
அவர்கள் இரண்டு பேரும் பிரம்மாவைக் கொல்ல முயற்சி செய்தபோது மகாவிஷ்ணு அவர்களை தடுத்து பிரம்மாவை காப்பாற்ற நினைக்கின்றார். உடனே அவர்கள் இருவரும் கூறுகின்றனர். உங்களுக்கு நாம் வரம் தருகின்றோம். பிரம்மாவை காப்பாற்ற முடியாது என்கின்றனர்.
அந்த வார்த்தையை எப்படியாவது பயன்படுத்த வேண்டும் என நினைத்த மகாவிஷ்ணு அந்த வரத்தை தனக்கு சாதகமாக்கி கொண்டார். அதாவது உங்கள் இரண்டு பேரது அழிவும் என்னுடைய கையில் இருக்க வேண்டும் என கேட்டார். அதைக் கேட்டு அசுரர்கள் அதிர்ச்சியடைந்தனர்.
இருப்பினும் கொடுத்த வாக்கைக் காப்பாற்ற வேண்டும் என நினைத்து மகாவிஷ்ணுவிடம் ஒரு விண்ணப்பம் வைக்கின்றனர். அதாவது நீங்கள் எங்களுடன் ஒரு மாத காலம் யுத்தம் செய்ய வேண்டும்.
அதன் பின்னரே உங்களிடம் சரணடைவோம் என கேட்டனர். மகாவிஷ்ணுவும் அதுக்கு உடன்பட்டார். அதன் பின் யுத்தத்தில் அசுரர்கள் வீழ்த்தப்பட்டனர்.
மகாவிஷ்ணுவின் மகிமையை உணர்ந்த அசுரர்கள் மகாவிஷ்ணுவின். பரமபதத்தில் எப்போதும் வாசம் செய்ய வேண்டும் என கேட்டுக் கொண்டனர்.
அதன்படி மார்கழி மாதம் வளர்பிறை ஏகாதசியன்று பரமபதத்தில் வடக்கு வாசலைத் (சொர்க்கவாசலை) திறந்து அந்த வழியாக அசுரர்களை மகாவிஷ்ணு ஏற்றுக்கொண்டார்.
அவர்களுக்கு கிடைத்த பேரின்பம் எல்லோருக்கும் கிடைக்க வேண்டும் என விரும்பி மகாவிஷ்ணுவுடன் கேட்டுக் கொண்டனர். அதன் பின்னரே வைகுண்ட ஏகாதசி எனும் நாள் கடைப்பிடிக்கப்பட்டு வருகின்றது.